8வது ஜனாதிபதித் தேர்தலும்: மக்களின் எதிர்பார்ப்புக்களும்.

கட்டுரையாசிரியரின் இக் கட்டுரைக்கான நோக்கம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை எடுத்தியம்புவதோடு மாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான  சமகால விடயங்களை  நடுநிலையாய் நின்று அரசியல் விஞ்ஞான ஆய்வுக்கும் உட்படுத்துவதாகும்.

எதிர்வருகின்ற நவம்பர் 16ம் திகதி இலங்கையின் வரலாற்றிலும் ச‌ர்வதேச உறவுகளின் தன்மையினை தீர்மானிப்பதிலும் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அத் திகதியே இலங்கையின் 8வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் தினமாகும்.

“மக்களின் முடிவே மகேசனின் தீர்ப்பு” என்ற கூற்றுக்கு அமைவாக நவீன ஜனநாயக பின்பற்றலில் தேர்தல் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. நேரடி ஜனநாயக முறையின் உபயோகம் சரிவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் நவீன ஜனநாயக பொறிமுறையான மறைமுக ஜனநாயகம் தோற்றம் பெற்றது. இம் மறைமுக ஜனாயகத்தின் பிரதான எந்திரமான தேர்தலானது சர்வஜன வாக்குரிமையின் உபயோக கருவியாக தொழிற்படுகின்றது.

சர்வஜன வாக்குரிமை என்றால் என்ன என்பதனை பார்ப்போமாயின் “ஒரு நாட்டிற்குரிய தகைமை பெற்ற சகல பிரஜைக்கும் இனம், மதம், மொழி, சாதி, குலம், கல்வி, சொத்துரிமை, பிறப்பு, பிறப்பிடம், ஆண், பெண் ஆகிய எதுவித பேதங்களும் அற்ற வகையில் நாட்டின் அதிகார நிர்வாகத்தில் பங்கேற்கும் உரிமையும் அ‌த்துட‌ன் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கான உரிமையினையுமே சர்வஜன வாக்குரிமை என அடையாளப்படுத்தலாம்.

இலங்கையின் வரலாற்றை பொருத்தமட்டில் 1931ஆம் ஆண்டின் டொனமூர் அரசியலமைப்புச் சீர்திருத்தமே முதன் முறையாக மக்களுக்கு சர்வஜன வாக்குரிமையினை நல்கியது. இருப்பினும் டொனமூர் யாப்பின் பிரகாரம் 21 வயதினை பூர்த்தி செய்த நபர்களுக்கு மாத்திரமே சர்வஜன வாக்குரிமையினை உபயோகிக்க முடிந்தது. எ‌னினு‌ம் இவ் நிலையானது 1959 ஆண்டு  வரை நீடித்திருந்தது. 1959ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க தேர்தல் திருத்தச் சட்டம் சர்வஜன வாக்குரிமைக்கான தகுதியான வயதெல்லையாக 18 வயதைக் குறிப்பிட்டது. இதற்கான அரசியலமைப்பு அங்கிகாரமானது 1978ம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு உறுப்புரை 4 (உ) வினால் வழங்கப்பட்டுள்ளது..

இதன் பிரகாரம் பதினெட்டு வயதை அடைந்தவரும் குடியரசு ஜனாதிபதிக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான தேர்தலிலும் ஒவ்வொரு மக்கள் தீர்ப்பிலும்  தேருநராக இருப்பதற்கு தகைமை கொண்டுள்ளமையால் தேருநர் இடாப்பில் தம் பெயர் பதிவு செய்யப்பட்டவருமான ஒவ்வொரு பிரஜையினாலும் வாக்குரிமை பிரயோகிக்கப்படும். இதன் மூலம் 18 வயதைப் பூர்த்தி செய்த வாக்களிக்க தகுதியான பிரஜைகள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதியுடையவராக அங்கீகரிக்கப்பட்டனர். இவ் நிலைமையானது இன்று வரை பின்பற்றபடுகின்றது.

ஓர் ஜனநாயக நாட்டின் உயர்ந்த சுட்டிகளில் பிரதான இடத்தை பெறுவது மக்கள் இறைமையாகும். அந்த வகையில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் உறுப்புரை 3ஆனது  இலங்கை குடியரசில் இறைமை மக்களுக்குரியதாகவும் பராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும் என்றும் இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும் எனவும்  தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே வாக்குரிமையினால் உந்தப்படும் தேர்தலானது மக்கள் இறைமை பிரயோகப்படுத்தப்படும் சந்தர்ப்பமாக குறிப்பிடலாம். இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பில் வாக்களித்தல் ஓர் அடிப்படை உரிமையாக அத்தியாயம் III  இன் கீழ் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. உறுப்புரைகளான  3, 4(அ), (ஆ) மற்றும் (உ), அத்தியாயம் XIV (வாக்குரிமையும் தேர்தல்களும்) என்பவற்றின் ஊடாகவே வாக்குரிமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்ற முர்த்தீர்ப்புக்கள் (Judicial Precedent), நீதியியல் செயற்பாட்டுமுறைமை (Judicial Activism) போன்றவற்றின் மூலமாக வாக்குரிமையானது அடிப்படை உரிமையாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக தேசப்பிரிய கருணாதிலக எதிர் தேர்தல் ஆணையாளர் மற்றும் 13 ஏனையவர்கள் (1999-1-SLR-157)  எனும் வழக்கினை குறிப்பிடலாம். இவ் வழக்கில் உயர் நீதிமன்றமானது வாக்களித்தல் என்பது கருத்து சுதந்திரம் (உறுப்புரை 14(1) (அ) ) என்ற உரிமைக்குள் உள்ளடங்குகின்றது எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இன்று ஒருவரின் வாக்குரிமை மீறப்பட்டால் உயர் நீதிமன்றத்தில் அதற்கான நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை 4ஆனது உறுப்புரை 3இல் கூறப்பட்டுள்ள மக்கள் இறைமை எவ்வாறு பிரயோகிக்கப்படும் என்பதனை சுட்டிக்காட்டுகின்றது. உறுப்புரை 4(அ)வின் படி மக்களது சட்டமாக்கற் தத்துவம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட பாராளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும். எனவே  மக்கள் இறைமையான வாக்குரிமையானது பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலமாகவும்  சட்டமாக்கற் தத்துவமாக பிரயோகிக்கப்படும் என்பதாக  கோடிட்டுக் காட்டப்படுகின்றது.

உறுப்புரை 4(ஆ)வானது இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களது ஆட்சித்துறைத் தத்துவம், மக்களால் தெரிவு செய்யப்படும் குடியரசு ஜனாதிபதியினால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும் எனக் கூறுகின்றது. இவ்வுறுப்புரையின் மூலமாகவும் மக்கள் இறைமையான வாக்குரிமையானது ஜனாதிபதியினை தெரிவு செய்தல் மூலம் ஆட்சித் துறைத் தத்துவமாக பிரயோகிக்கப்படுகின்றது.

மேலும் இவ் வாக்குரிமையானது மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி சபை தேர்தல் போன்றவற்றிற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இம் முறை இவ் ஆண்டின் இறுதி பகுதியில் இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் பெறுவதோடு மாத்திரமன்றி மிகுந்த எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜே. ஆர். ஜேவர்த்தவினால் கொண்டுவரப்பட்ட  1978 ஆம் ஆண்டின்  இரண்டாம் குடியரசு அமைப்பில் அதிமுக்கிய ஏற்பாடாகவும், பலத்த நேர் மற்றும் எதிர் மறை விமர்சனங்களுக்கு உள்ளாகின்றதுமான ஓர் ஏற்பாடாக அமைவது “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி” முறையாகும்.

சர்வதேச நாடுகளை ஒப்பிடுகையிலும் இலங்கையில் இதுவரைக்கும் முன்மொழியப்பட்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புக்களின் ஏற்பாடுகளை பார்க்கையிலும் தெட்டத் தெளிவாக புலனாகின்ற விடயம் என்னவெனில் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “நிறைவேற்று ஜனாதிபதி” பதவியே அதிகாரச் செறிவு மிக்க பலம்பொருந்திய  பதவியாகும்.

நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம், கடமை மற்றும் வகிபாகத்தினை ஆராய்கின்ற போது இப் பதவியானது பெயருக்கு ஏற்றால் போல் இலங்கை குடியரசின் அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும் சகல அதிகார மூலங்களும் ஒன்றுதிரட்டப்பட்டு அவ் அதிகாரத்தை பிரயோகிப்பதற்கென நிறுவப்பட்டுள்ள நிறுவனம்சார், கட்டமைப்புசார் மற்றும் தொழிற்பாட்டுசார் உயர் அரசியல் தாபனம் எனக் குறிப்பிடலாம்.

எடுத்துக்காட்டாக 1978 ஆம் ஆண்டின் இரண்டாம்  குடியரசு யாப்பின் உறுப்புரை 30(1)இன்(அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 3ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக) படி இலங்கைக் குடியரசிற்கு ஜனாதிபதி இருத்தல் வேண்டும்; அவரே அரசின் தலைவராகவும், ஆட்சித் துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவராகவும், ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவராகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.

மேலும் உறுப்புரை 30(2)ஆனது (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 3ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக) குடியரசின் ஜனாதிபதி மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், அவர் ஐந்தாண்டுகள் கொண்டவொரு தவணைக்குப் பதவி வகித்தலும் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.

உறுப்புரை 33(1) ஆனது (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 5ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக) ஜனாதிபதியின் கடமைகள், தத்துவங்கள் மற்றும் பணிகள் என்பவற்றை குறிப்பிடுகின்றது. இதன் பிரகாரம் கடமைகளாக அரசியலமைப்பு மதிக்கப்பட்டு போற்றப்படுதலை உறுதிப்படுத்தல், தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துதல், அரசியலமைப்பு பேரவை மற்றும் VII அ என்னும் அத்தியாயத்தில் குறிப்பீடு செய்யப்படும் நிறுவனங்களின் முறையான செயற்பாட்டை உறுதிப்படுத்துதலும் வசதியளித்தலும், தேர்தல் ஆணைக்குழுவின் மதியுரையின் மீது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களும், மக்கள் தீர்ப்பும் நடைபெறுவதற்கான உகந்த நிபந்தனைகள் உருவாக்கப்படுதலை உறுதி செய்தல் போன்ற ஏனைய பிற கடமைகளும் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசின் தலைவர் என்ற வகையில் அரச இலச்சினையப் பிரயோகித்தல் மற்றும் பாதுகாத்தல், அரச விழாக்களுக்கு தலைமை தாங்குதல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டல், சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல், சர்வதேச சமூகத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் இன்னும் பிற அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உண்டு.

நிறைவேற்று துறையின் தலைவர் என்ற முகாந்திரத்தின் அடிப்படையில் பகிரங்கச் சேவையை கட்டுப்படுத்தல், பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமித்தல், அமைச்சர்களின் பொறுப்புக்களை தீர்மானித்தல் மற்றும் ஏனைய அதிகாரங்களும் உண்டு.

அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் அரச கொள்கைகளைத் தீர்மானித்தல், கபினட் கூட்டங்களுக்கு தலைமை தாங்கல், சுய விருப்பின் அடிப்படையில் விரும்பினால் எந்தவொரு அமைச்சையும் தனக்கு கீழ் கொண்டுவருதல் மற்றும் ஏனைய அதிகாரங்களும் உண்டு.

அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குதல் (உறுப்புரை 42(3)), அமைச்சின் செயலாளர்களை நியமித்தல், அமைச்சரவையைக் கூட்டுதல், கலைத்தல், ஒத்திவைத்தல், அமைச்சர்களுக்குள் ஒருவராக இருத்தல் மற்றும் ஏனைய அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உள்ளன.

ஆயுதம் தாங்கிய முப்படைகளின் தலைவர் என்பதன் அடிப்படையில் முப்படைகளை கட்டுப்படுத்துதல், படைகளின் ஆணையதிகாரம் பெற்ற அதிகாரிகளை நியமித்தல், நீக்குதல் மற்றும் இதர அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களாக: பிரகடனத்தின் மூலம் பாராளுமன்றத்தை கூட்டுதல், அமர்வினை ஒத்தி வைத்தல் (இரண்டு மாதங்களுக்கு மேற்படாமல்), அ‌த்துட‌ன் கலைத்தல். (உறுப்புரை 70 (1)-அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 17ஆம் வாசகத்தில் மாற்றீடு செய்யப்பட்டதற்கு அமைவாக- பாராளுமன்றம் அதன் முதல் கூட்டத்திற்கு நியமித்த தேதியிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களுக்கு குறையாத ஒரு காலப்பகுதி முடிவுறும் வரை, பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையின் (சமூகமளிக்காதோர் உட்பட) மூன்றிலிரண்டுக்குக் குறையாத உறுப்பினர்களால் அதன் சார்பில் வாக்களித்து நிறைவேற்றப்படும் தீர்மானமொன்றினால் அங்கனம் செய்யுமாறு பாராளுமன்றம் ஜனாதிபதியை வேண்டினாலொழிய அதனை கலைத்தலாகாது). மேலும் பாராளுமன்ற சடங்கு முறையான இருக்கைக்கு தலைமை தாங்குதல், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை நியமித்தல், பாராளுமன்றில் தோன்றி உரையாற்றுதல் மற்றும் ஏனைய சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களையும் கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள் என்ற அடிப்படையில் உறுப்புரை 34(1) (அ)வின் படி குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குதல், உறுப்புரை 34(1) (இ)இன் பிரகாரம் தண்டனையை குறைத்தல், உறுப்புரை 107 (1) வின் படி  (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 29 வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக) பிரதம நீதியரசரும், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் மற்றும் உயர் நீதிமன்றத்தினதும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் ஏனைய ஒவ்வொரு நீதிபதியும் அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்துக்கமைய ஜனாதிபதியினால் கைப்பட எழுதப்பட்ட எழுத்தானையின் மூலம் நியமித்தல் மற்றும் ஏனைய நீதித் துறை சார்ந்த அதிகாரங்களும் உள்ளன.

இருப்பினும் ஜனாதிபதியின் அதிகார வகிநிலை தொடர்பான கண்னோட்டமானது  பத்தொன்பதாம் திருத்தத்திற்கு முன்னரான மற்றும் பின்னரான நிலை என இரு நிலைகளில் பார்க்கப்படுகின்றது. பத்தொன்பதாம் திருத்தத்திற்கு முன் பதினெட்டாம் திருத்தத்தின் மூலமும் அதற்கு முன்னரான ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியானது எல்லையற்ற அதிகளவான அதிகாரங்களை உபயோகிக்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக வரையறுக்கப்படாத ஆட்சி முறை, ஜனநாயக பண்புகள் குன்றியமை, சட்டத்தின் ஆட்சி வலுவிழந்தமை போன்ற பல்வேறு விடயங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஆயினும் பத்தொன்பதாம் திருத்தத்தின் மூலம் ஓரளவுக்கு (சொற்ப அளவில்) நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. குறிப்பாக உறுப்புரை 33(அ)வின் படி  ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பாதல் (அதாவது அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 6ஆம் வாசகத்தால் சேர்க்கப்பட்டதற்கு அமைவாக ஜனாதிபதி அரசியலமைப்பின் கீழும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அப்போதுள்ள சட்டம் உட்பட எழுத்திலான, ஏதேனும் சட்டத்தின் கீழும், தமது தத்துவங்களையும், கடமைகளையும் மற்றும் பணிகளையும் உரிய முறையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும் மற்றும் நிறைவேற்றுவதற்கும் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாதல் வேண்டும்), ஜனாதிபதிக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்கினை சட்டமா அதிபருக்கு  எதிராக தோதான வழக்கு நடவடிக்கையாக  தொடுப்பதற்கான ஏற்பாடு (உறுப்புரை 35 (1) காப்புக் கவசம்-அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 7ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக), ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டமை, ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாமை (நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியும்) போன்றவற்றை குறிப்பிடலாம்.

எவ்வாறு எது இருப்பினும், மேற்கூறப்பட்ட சிறியளவான அதிகார குறைப்பின் காரணமாக அரசு பொறிமுறையின் மைய அச்சாணியாக விளங்கும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் வகி நிலையில் பெறியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. இன்றும் இப்பதவியானது உயர் அதிகாரமிக்க பதவியாக காணப்படுகின்றது. எனவே இவ்வாறு அ‌திகார‌மிக்க பதவிக்கான நபரை தெரிவு செய்வதற்கான போட்டியே ஜனாதிபதி தேர்தலாக வரையறுக்கப்படுகின்றது.

நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரமும், ஓர் இலங்கை பிரஜை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அவர் அவ் ஏற்பாடுகளினால் விதந்துரைக்கப்பட்ட தகைமைகளை பூர்த்தி செய்த நபராக இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமானதொன்றாகும்.

அதனடிப்படையில் பார்ப்போமாயின் 1978ஆம் ஆண்டின் யாப்பின் உறுப்புரை 31(1)இன் படி ஜனாதிபதி பதவிக்கெனத் தேர்ந்தெடுக்கக்கூடிய தகைமை கொண்ட எந்த பிரஜையும் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியற்  கட்சியினால் (உறுப்புரை 31(1) (அ)) அல்லது அவர், சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவராயின் அல்லது இருந்தவராயின், வேறேதேனும் அரசியற் கட்சியினால் அல்லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரை பதிந்துள்ளவரான ஒரு தேருநரால் (உறுப்புரை 31(1) (ஆ)), அத்தகைய பதிவுக்கான வேட்பாளராகப் பெயர் குறித்து நியமிக்கப்படலாம்.

மேலும் உறுப்புரை 31(2)இன் அடிப்படையில் (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 4(1)ஆம் வாசகத்தால் உட்சேர்க்கப்பட்டதற்கமைவாக) ஜனாதிபதிக்கு மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆள் எவரும், அதன் பின்னர் அத்தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகு‌தியற்ற நபராக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும், உறுப்புரை 92 ஆனது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முடியாமற் செய்யும் தகைமையீனங்கள் பற்றி எடுத்துரைக்கின்றது. அதனடிப்படையில் ஒரு நபர் முப்பத்தைந்து வயதையடையாதவராக இருந்தால் (உறுப்புரை 92(அ) – அரசியலமைப்பின் பத்தொன்பதாம் திருத்தத்தின் 21(1)ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டது) அல்லது அவர் 91ஆம் உறுப்புரையின் (1)ஆம் பந்தியின் (ஈ), (உ), (ஊ‌‌) அல்லது (எ) எனும் உட்பந்திகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையற்றவராக இருந்தால் (உறுப்புரை 92(ஆ)) உதாரணமாக 91(ஈ) (I) நீதித்துறை அலுவலர், (II) நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர், (III) பாராளுமன்ற செயலாளர் நாயகம், (IV) பகிரங்க சேவை ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக இருந்தால், (XIII) வேறு ஏதேனும் நாட்டின் பிரஜையாகவுமுள்ள இலங்கை பிரஜையொருவர் (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 20(4)ஆம் பிரிவினால் சேர்க்கப்பட்டது).

91(உ) பாராளுமன்றத்தினால் சட்டத்தின் மூலம் விதந்துரைக்கப்பட வேண்டியதும் அரசினால் அல்லது பகிரங்க கூட்டுத்தாபனத்தினால் அல்லது அத்தகைய ஏதேனும் ஒப்பந்தத்தில் அவ்வாறு விதந்துரைக்கப்பட வேண்டிய அத்தகைய ஏதேனும் அக்கறையுடையவராக இருந்தால், மேலும் 91(ஊ)வின் படி வங்குரோத்தானவர், 91 (எ)இன் படி பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரின் நிதானிப்பை திசை திருப்பும் நோக்கத்துடன் வழங்கப்பட்ட இலஞ்சத்தை அல்லது அவா நிறைவை ஏற்றுள்ளாரெனத் தகு‌தி வாய்ந்த நீதிமன்றத்தினால் அல்லது விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றினால் நேர் முற்போந்த ஏழாண்டுக் காலத்துள் தீர்ப்பளிக்கப்பட்டவராக இருந்தாலோ,

உறுப்புரை 92(இ)இன் பிரகாரம் அவர் ஜனாதிபதி பதவிக்கு மக்களினால் இரு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தாலோ அல்லது 92(ஈ)இன் படி அவர் 38ஆம் உறுப்புரையின் இரண்டாம் பந்தியின் (உ) எனும் உட்பந்தியினது ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருந்தாலோ (அதாவது பின்வரும் காரணங்களுக்காக ; (I) அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறிய குற்றம், (II) தேசத்துரோக குற்றம், (III) இலஞ்சம் பெற்ற குற்றம், (IV) தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம், (V) ஒழுக்கக்கேட்டை உட்படுத்தும் ஏதேனும் சட்டத்தின் கீழான ஏதேனும் தவறு போன்றவற்றுக்காக நீக்கப்பட்டால்) அவ் நபர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே மேற்கூறப்பட்ட தகைமையீனங்களுக்கு உட்படாமல், அரசியலமைப்பினால் கூறப்பட்டுள்ள தகைமைகளுக்கு உட்பட்ட 35 நபர்கள் இம்முறை நடக்கவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். இச் சந்தர்ப்பத்தில் சற்று உன்னிப்பாக அவதானிப்போமாயின் இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற பண்முனை போட்டிக்களமாக இவ் 8வது ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடலாம்.

கடந்த மாதம் 7ம் திகதி இடம்பெற்ற வேட்பு மனுத்தாக்கலில் 35 நபர்கள் தேர்தல் ஆணையத்தில் தங்களது வேட்பு மனு பத்திரத்தை ஒப்படைத்து ஜனாதிபதி தேர்தல் போட்டியில் குதித்தனர். இவ் 35 நபர்களுள் பெரும்பான்மை எண்ணிக்கையினர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களாகவும், நால்வர் (மூன்று முஸ்லிம் நபர்கள், ஒரு தமிழர்) சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாகவும் காணப்பட்டனர். அதிலும் குறிப்பாக இம்முறை தேர்தலில் ஒரு பெண்மணியும் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் அரசியலமைப்புக்களை பத்தொன்பதாம் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவானது பத்தொன்பதாம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட ஆணைக்குழுக்களுள்  ஒன்றாகவும், மூன்று பெயரை உறுப்பினர்களாக கொண்ட சுயாதீன ஆணைக்குழுவாகும் அமையப்பெற்றுள்ளது.

1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசின் உறுப்புரை 93 ஆனது தேர்தலானது எவ்வாறு இருத்தல் மற்றும் நடாத்தப்பட வேண்டும் என்பதை கோடிட்டுக்காட்டுகின்றது. அதாவது இதன் விரிவாக்கம் யாதெனில் குடியரசின் ஜனாதிபதிக்கான தேர்தலிலும், ஏதேனும் மக்கள் தீர்ப்பிலும் வாக்களிப்பது தந்திரமானதாகவும், சமத்துவமானதாகவும் (தகுதியுடைய ஒவ்வொருவருக்கும் ஒரு நபருக்கு ஓர் வாக்கு என்ற அடிப்படையிலான வாக்களித்தலுக்கான சமமான சந்தர்ப்பம் அல்லது வாய்ப்பினை அளித்தல்), இரகசியமானதாகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது. இம் மேல் சொல்லப்பட்ட விடயமே ஒவ்வொரு பிரஜையும் இலங்கையர் என்ற அடிப்படையில் நடக்கவிருக்கின்ற தேர்தல் தொடர்பான அவர்களது ஏகோபித்த சட்ட ரீதியிலான எதிர்பார்ப்பாக (Legitimate Expectations) காணப்படுகின்றது.

வாக்குரிமை என்பது உரிமைகளினுள் முதன்மையானதும், அடிப்படையானதும், முக்கியமானதுமான உரிமையாக இருக்கின்றது. ஏனெனில் இவ் விடயத்தின் மூலமே அரசியல் சார் விடயங்கள் யாவற்றையும் தீர்மானிக்கும் காரணியாக பரிணமிக்கின்றது. இதன் நிமித்தம் கவனிப்போமாயின் வாக்களித்தல் என்பது ஒவ்வொருவரின் பராதீனப்படுத்த முடியாத  அதாவது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாற்ற முடியாத உரிமையாகும்.

எனவே ஒருவர் அவரின் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அவ் வாக்குரிமையினை பிரயோகிக்க முடியும். மாறாக இன்னொருவரின் தூண்டுதலினாலோ, அல்லது விருப்பத்தின் பேரிலோ, இவ் வாக்குரிமையினை பயன்படுத்த முடியாது. ஒரு நபர் தேர்தலில் வாக்களித்தல் என்பது அவரின் ஜனநாயகக் கடமையாகும். ஒருவரை இன்னொருவர் வாக்களிக்கும் படியோ அல்லது வாக்களிப்பை புறக்கணிக்குமாறு கூறுவதோ அல்லது தூண்டுவதோ அபத்தமானதாகும் மற்றும் வற்புறுத்த முடியாததாகும். இருப்பினும் ஜனநாயக நீரோட்டத்தின் வினைத்திறன் சார் நெறிமுறை நீட்சிக்கு வாக்களித்தல் என்பது அவசியமானதாகும்.

1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு உறுப்புரை 94 மற்றும் 1981ஆம் ஆண்டின் 15ம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டமானது ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான ஏற்பாடுகளை கூறுவதோடு எவ்வாறு வாக்களித்தல் மற்றும் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் எவ்வாறு ஜனாதிபதியை தேர்வு செய்தல் போன்ற விடயங்க்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.

மனிதன் ஒரு அரசியல் பிராணி என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாக்களிக்க தகுதியான பிரஜையும் எவ்வாறு செல்லுபடியான வாக்கினை அளித்து வாக்குரிமையினை வீணாக்காமல் தடுப்பது என்றும் தங்களால் அளிக்கப்பட்ட வாக்கில் இருந்து எவ்வாறு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகின்றார் என்பதனை அறிந்திருப்பது முக்கியமானதொன்றாகும். எ‌னினு‌ம் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான போதியளவான விழிப்புணர்வு காணப்படாமை கவலைக்குரியதொன்றாகும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் முறையான வாக்களிப்பினை உறுதி செய்யும் நோக்கில் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்குகளை எவ்வாறு கணிப்பீடு செய்வது தொடர்பாக கீழ் வரும் பந்திகள் தெளிவுபடுத்துகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முறையானது ஏனைய தேர்தல் முறைகளில் இருந்து வேறுபடுகின்ற ஓர் தேர்தலாகும். ஜனாதிபதியானவர் ஒரு புறம்பான ஜனாதிபதி தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக மாற்றீட்டு வாக்கு முறையின் (விருப்பு வாக்குகளை மாற்றீடு செய்தல்) அடிப்படையில் அறுதிப் பெரும்பான்மை அதாவது ஐம்பது சதவீதத்துக்கும் மேலான வாக்குகளால் தெரிவு செய்யப்படுவார். இவ் ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை முழுவதும் ஒரு தேர்தல் தொகுதி அல்லது தேர்தல் மாவட்டமாக கருதப்பட்டு இத்தேர்தல் இடம்பெறும்.

ஒரு நபர் போட்டியிடுவராயின் அந்நபரே ஏகமனதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இருவர் போட்டியிடுவராயின் இருவருள் ஒருவருக்கு மக்கள் வாக்களிக்கலாம். அவ் அளிக்கப்பட்ட வாக்குகளில் யார் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளைப் பெறுகின்றாரோ, அவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

எனினும் இருவருக்கு மேல் போட்டியிடுவராயின் அச்சந்தர்ப்பத்திலேயே விருப்பு வாக்குகள் அளிக்கப்படலாம். மேலும் மூவர் போட்டியிடுவார்களாயின் இரு விருப்பு வாக்குகளையும், மூவருக்கு மேல் போட்டியிடுவார்களாயின் மூன்று விருப்பு வாக்குகளையும் அ‌ளி‌க்கலா‌ம். ஆகவே இம்முறை மூவருக்கு மேல் அதாவது 35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக ஒரு வாக்காளர் தாம் விரும்பினால் அதனடிப்படையில்  விருப்பு வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கின்றது.

1978ஆம் ஆண்டின் இரண்டாம்  குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை 94(1) வாக்களித்தலை குறிக்கின்றது அதன் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தமது வாக்கினை எவரேனும் வேட்பாளருக்கு அளிக்கின்ற போது ; (அ) அத்தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் இருக்கின்றவிடத்து இரண்டாவது ஆளாக யாரை விரும்புகின்றார் என்பதை தெரிவிக்கலாம் ; அ‌த்துட‌ன் (ஆ) அத்தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கின்றவிடத்து, இரண்டாவது ஆளாகவும் மூன்றாவது ஆளாகவும் யார், யாரை விரும்புகிறார் என்பதையும் தெ‌ரி‌வி‌க்கலாம்.

இதனையே 1981ஆம் ஆண்டின் 15ம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டம் பிரிவு 37 கூறுகின்றது. மேலும் இச் சட்டத்தின் அட்டவணை III  (Third Schedule) பிரகாரம் வாக்காளர்கள் தங்களது விருப்பு வாக்கினை 1,2,3 என இலக்கமிட்டு அளிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

உறுப்புரை 94 (2), (3), (4) ஆகியன வேட்பாளர் ஒருவர் வாக்கு கணிப்பீட்டின் அடிப்படையில் எவ்வாறு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை விளக்குகின்றது. உறுப்புரை 94(2)இன் அடிப்படையில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளை பெறுகின்ற வேட்பாளர், அப்படி பெறுகின்ற ஒருவராக இருந்தால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என வெளிப்படுத்தல் வேண்டும் எனக் கூறுகின்றது.

உறுப்புரை 94(3) இன்படி மேற்கூறப்பட்ட வழி முறையில் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என வெளிப்படுத்தப்படுகின்றவிடத்து, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்ற வேட்பாளரும் அதற்கு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரையும்  தவிர்ந்த ஏனைய வேட்பாளர் அல்லது வேட்பாளர் போட்டியில் இருந்து நீக்கி விடப்படுதல் வேண்டும் என்பதோடு (அ) போட்டியிலிருந்து நீக்கி விடப்பட்ட ஒரு வேட்பாளருக்கு தமது வாக்கை அளித்துள்ள ஒவ்வொரு வாக்காளரதும் இரண்டாவது விருப்பத்தெரிவானது எஞ்சியுள்ள இரண்டு வேட்பாளர்களுள் யாதேனுமொருவர்க்கானதாக இருப்பின் ; அது அந்த வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்காக எண்ணப்படுதலும் வேண்டும்; அ‌த்துட‌ன் (2)ஆம் பந்தியின் கீழ் எண்ணப்பட்ட அவருக்குரிய வாக்குகளுடன் அது சேர்க்கப்படுதலும் வேண்டும் ; அ‌த்துட‌ன்

உறுப்புரை 94 (3) (ஆ) உட்பந்தி (அ)இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஒரு வாக்காளரின் இரண்டாவது விருப்பத்தெரிவானது அந்த உட்பந்தியின் கீழ் எண்ணப்படாவிட்டால், அவரது மூன்றாவது விருப்பத்தெரிவானது எஞ்சியுள்ள இரண்டு வேட்பாளர்களுள் யாரேனுமொருவர்க்கானதாக இருப்பின் அந்த மூ‌ன்றாவது விருப்பத்தெரிவு அந்த வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்காக எண்ணப்படுதல் வேண்டும் ; அ‌த்துட‌ன் (2)ஆம் பந்தியின் கீழும் (அ) எனும் உட்பந்தியின் கீழும் எண்ணப்பட்ட அவருக்குரிய வாக்குகளுடன் சேர்க்கப்படுதலும் வேண்டும் : இவ்வாறெண்ணப்பட்ட வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென வெளிப்படுத்தல் வேண்டும்.

எனினும் உறுப்புரை 94(4)இன் பிரகாரம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்களால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சரிசமமாக உள்ளவிடத்து, அவர்களுள் யார் ஜனாதிபதி என்பதனை திருவுளச்சீட்டின் மூலம் முடிவு செய்யப்படுதல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட விடயமே ஓர் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்கு மாற்றீட்டு கணிப்பீட்டின் அடிப்படையில் எவ்வாறு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகின்றார் என்பதை விளக்குகின்றது.

ஓர் தேர்தலின் போது மிகவும் முக்கியமாக அவதானிக்கப்படுகின்ற விடயமாக கருதப்படுவது தேர்தல் வேட்பாளர்களினால் அவர்களது கட்சி சார்பாக வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனமாகும் (Manifesto). தேர்தல் விஞ்ஞாபனமானது கொள்கைகள், திட்டங்கள், செயற்பாட்டு விடயங்கள் போன்றவற்றை பிரகடனப்படுத்தும் ஓர் வெள்ளை அறிக்கையாகும். மக்கள் இவ்வறிக்கையின் வெளிப்பாட்டு தன்மையின் நன்மை, தீமையினை அடிப்படையாக கொண்டே யாருக்கு வாக்களிப்பதென்பதனை தீர்மானிப்பர்.

இம்முறை தேர்களமானது பன்முனை போட்டித்தன்மை கொண்ட அரங்காக காணப்பட்டாலும், மூன்று வேட்பாளர்கள் மத்தியில் பலத்த போட்டித் தன்மை காணப்படுகின்றது. இம் மும்முனைப் போட்டியின் உச்ச நிலையினை  தேர்தல் அண்மித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இவ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கையர் என்ற வகையில் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. எனினும் இவ் எதிர்பார்ப்புகளில் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களிடமும் ஒருமித்த கருத்து காணப்படவில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது. ஏனெனில் பெரும்பான்மை மக்களிடம் ஓர் விதமான எதிர்பார்ப்புக்களும், மறுபுறம் சிறுபான்மை மக்களிடம் வேறுவிதமான எதிர்பார்ப்புகளும் புரையோடிக் காணப்படுகின்றன.

இவ் எதிர்ப்புகளுக்கு தீனி போடும் விதமாக ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளை ஒழுங்கமைத்துக் கொள்கின்றனர். எனினும் இதுவரை நடந்த தேர்தல்களிலும் மற்றும் பொதுவான ஓர் பார்வையின் அடிப்படையிலும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு இவ் தேர்தல் விஞ்ஞாபனம் பத்திரிகை அலங்காரமாகவே காணப்படுவதாகும். எனவே இந்நிலை மாற்றப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்படுகின்ற விடயங்கள் கட்டாயமாக நிறைவேற்றப்பட்டு அமுலாக்கப்பட வேண்டிய நிலையாக மாற்றமடைதல் என்பது  காலத்தின் கட்டாயமாகும்.

இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூவரின் விஞ்ஞாபனமே அதீத பேசுபடு பொருளாகவும் மக்கள் மத்தியில் ஆராயப்படுகின்ற தேர்தல் விஞ்ஞாபனங்களாகவும்  பார்க்கப்படுகின்றன. 40 அரசியல் கட்சிகளும் 18 சிவில் அமைப்புக்களினாலும் ஏற்படுத்தப்பட்ட கூட்டினைவான புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் “சஜித் சமூகப் புரட்சி” எனும் தலைப்பிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை 2019.10.31ஆம் திகதியன்று கண்டியில் வைத்து வெளியிட்டார்.

17 கட்சிகளினதும் மற்றும் சிவில் அமைப்புக்களினதும் கூட்டினைவான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் 2019.10.25ஆம் திகதி கொழும்பு தாமரை தடாகத்தில் வைத்து “கோட்டபாயவின் நாட்டை கட்டியெழுப்பும் சூபீட்ச நோக்கு” எனும் தலைப்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தை   வெளியிட்டார்.. தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் 2019.10.26ஆம் திகதி “தேசத்தின் எதிர்பார்ப்பு” எனும் தலைப்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்..

“சஜித் சமூகப் புரட்சி” எனும் தலைப்பிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றிணைந்த நாட்டில் சமத்துவ நிலை, போதைப் பொருள், ஊழல், மத அடிப்படை வாதம் என்பவற்றுக்கு எதிராக முப்படை யுத்தம், சமூகப் பாதுகாப்பு, பொறுப்புக்கூறும் தலைமைத்துவம், சுதந்திரமான சுகாதார சேவை, இளைஞர்களின் பரிமாற்றம், போட்டிமிகு இலங்கைக்கு போட்டியான சந்தை, 52% பெண்களுக்கான பொறுப்பு ஒதுக்கம், தொழிலாளர் நலனோம்புகை, நவீன விவசாய தொழிநுட்பம், நியாயமான மற்றும் நடுநிலையான வரிகள், இந்து சமுத்திர கேந்திர நிலையத்தை உருவாக்குதல், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், நவீன பக்க சார்பற்ற நீதி மன்ற வலையமைப்பு, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் அமைச்சர்களுக்கு இரத்து, சகலருக்கும் வீடு, புலம் பெயர்ந்துள்ள பணியாளர்களுக்கு கௌரவம், குடும்ப தலையீடு அற்ற ஆட்சி, திறமைக்கு இடம் கொடுக்கும் அரச சேவை, பல்நோக்கு பொது போக்குவரத்து கொள்கை உட்பட்ட முக்கிய 20 விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமானது இருவித பார்வைக்கு உட்பட்டுள்ளது. அதாவது இங்கு எழும் பிரதான வினா என்னவெனில் இவ் தேர்தல் விஞ்ஞாபனம் பெரும்பான்மை மக்களை எங்கனம் திருப்திபடுத்தியுள்ளது என்பதும் அதே சமயம் சிறுபான்மையினரின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களுக்கான உரிமைக் குரலுக்கு எங்கனம் செவி சாய்த்துள்ளது என்பதாகும்.

இலங்கையில் கடந்த நான்காம் மாதம் நடாத்தப்பட்ட “ஈஸ்டர் தாக்குதலை” தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் மனநிலையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான மன ஓட்டம் மற்றும் அது தொடர்பான விடயமே பிரதானப்படுத்தப்பட்டது. எனவே பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு தேசிய பாதுகாப்பு தங்களது மதத்துக்கான முன்னுரிமை மற்றும் ஏனைய விடயங்களில் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முற்றிலும் மாறான எதிர்பார்ப்பே சிறுபான்மையினர் மத்தியில் புரையோடிப் போயுள்ளது. இவ் எதிர்ப்பானது இத்தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கோரிக்கையோ அல்லது எதிர்பார்ப்போ இல்லை. இது இச் சிறுபான்மை மக்களின் நீண்ட கால உரிமைக் குரலாகும். சிறுபான்மை மக்கள் பல தசாப்தங்களாக முன்வைக்கும் கோரிக்கையாக அல்லது திடமான எதிர்பார்ப்புக்களாக அமைவது தேசிய இனப் பிரச்சனைகளுக்கான தீர்வு, அதிகாரப் பகிர்வு, ஒரு மதத்துக்கும் முன்னுரிமை அளிக்காமல் எல்லா மதத்தினையும் சமமாக நடத்தக்கூடிய சமதர்ம அல்லது மதச்சார்பற்ற அரசு (Secular State), மற்றும் ஏனைய விடயங்களாகும். இத‌ன் வெளிப்பாடாகவே அண்மையில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பகீரத பிரயத்தன முயற்சியின் மூலம் ஐந்து கட்சிகளை ஒருமித்து கூட்டாக வெளியிடப்பட்ட 13 அம்ச கோரிக்கைகளை குறிப்பிடலாம்

இவ் விடயம் தொடர்பில் சற்று உன்னிப்பாக அவதானித்தால் இது வரைக்கும் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு வேட்பாளரும் இவ் 13 அம்ச கோரிக்கையினை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கவில்லை. ஏனெனில் இக் கோரிக்கைக்கு தலையசைத்தால் தாம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழந்து தமது வாக்கு வங்கியில் சரிவினை தாம் எதிர்கொள்ள நேரிடும் எனும் ஐயப்பாடே அதற்கான காரணமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த வகையில் “புதிய ஜனநாயக முன்னணியின்” ஜனாதிபதி வேட்பாளர் இவ் விடயம் தொடர்பாக வெளிப்படை கருத்துக்களை குறிப்பிடாமல் தனது தேர்தல் விஞ்ஞாபனமான “சஜித் சமூகப் புரட்சியினை” பிரதானப்படுத்துகின்றார். இத் தேர்தல் விஞ்ஞாபனமானது அரசியல், சமூக, பொருளாதார விடயங்களின் அடிப்படையில் அமைந்த தேர்தல் விஞ்ஞாபனமாகும்.

“புதிய ஜனநாயக முன்னணியின்” ஜனாதிபதி வேட்பாளரும் பெரும்பான்மை மக்களின் எண்ணத்துக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதோடு மாத்திரமன்றி தேர்தல் மேடைகளிலும் இடித்துரைக்கின்றார். இதன் நீட்சியாகவே முன்னாள் இராணுவ தளபதியை (யுத்தத்தினை தலைமை தாங்கி வழி நடத்தியவரை) தாம் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பார் எனக் கூறினார். இவ்விடயம் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடமையாக இருப்பினும் சிறுபான்மையினத்தவர்கள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினையே எதிர்பார்க்கின்றனர்.

தேசிய இனப்பிரச்சினை  தொடர்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனித்துவமாக குறிப்பிடாமல் வேறு ஒரு தோரணையில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மை இனத்தவரின் உரிமைக்குரலான அல்லது கோரிக்கையான அதிகாரப்பகிர்வு தொடர்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிளவுபாடாத  மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிக பட்ச அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் என்றும் வடக்கு கிழக்கு மாகாண மேம்பாட்டுக்கான இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் மையத்தில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்கும், மையமும் மாகாணங்களும் தங்களது திறன்களின் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களை பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகளின் பிரதிநிதிகளை கொண்ட இரண்டாவது சபை (செனட் சபை) உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இத்தருணத்தில் அதிகாரப் பகிர்வு என்றால் என்ன என்பதனை தெரிந்து கொள்ளல் அவசியம் ஆகும். அதிகாரப் பகிர்வு என்பது இறைமை மத்திய அரசிடம் குவிக்கப்படாமல், மத்தியரசு, மாநில அரசுகள் என பிரிக்கப்பட்டு செயற்படும் பொறிமுறையே அதிகாரப் பகிர்வு எனக் கொள்ளப்படும்.

இவ் இடத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கின்றது. இவ் அதிகாரப் பகிர்வு என்ற விடயம் வெறும் வார்த்தை வடிவில் அமையக் கூடாது அது செயல் வடிவில் அமைய வேண்டும் என்பதே சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பாகும்.

அதாவது சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பு சமஸ்டி முறையில் அமைந்த அதிகாரப் பகிர்வாகும். அதாவது ஓர் அரசின் தன்மை சமஸ்டி எனின் அது அரசியலமைப்பில் கூறப்பட்டு அதன் மூலம் அதற்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் மத்திய, மாநில  அரசுகளின் அதிகாரங்கள் யாவை என தெளிவாக குறிப்பிடப்படுவதோடு, மா‌நில அரசுகளுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப் பெற்றுக் கொள்ள முடியாததுமானதாகவும், மா‌நில அரசுக‌ள் சுயாட்சியுடன் செயற்படுவதற்கான ஏற்பாடுகளையும் கொண்டிருப்பதாகவும், மத்திய மாநில அரசுகளுக்கிடையில் பிணக்குகள் ஏற்பட்டால் அதனை தீர்த்து வைப்பதற்கான நியாயாதிக்கம் கொண்ட ஓர் நீதிமன்ற கட்டமைப்பு தேவைப்படுத்தலையும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் “புதிய ஜனநாயக முன்னணியின்”ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் மேடைகளில் இலங்கையானது ஒற்றையாட்சி அரசு முறைமையை தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார். 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் உறுப்புரை 2ஆனது இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இங்கு எழுகின்ற கேள்வியானது ஒற்றையாட்சி அரசு முறை என்று கூறிக் கொண்டு எ‌ன்ன வகையில் அதிகாரப் பகிர்வு இடம் பெறப் போகின்றது என்பதாகும். இதற்கு அரசியல் ஆய்வாளர்கள் இரண்டு விதமான கருத்தினை முன்வைக்கின்றனர்.

அதாவது, ஒருசாராரின்   கருத்தின் அடிப்படையில் ஒரு நாட்டினுடைய அரசானது அதனது அரசியலமைப்பில் அது ஒற்றையாட்சி அரசா அல்லது  சமஸ்டி ஆட்சி அரசா எனக் குறிப்பிடுவது அவசியமாகும். ஏனெனில் அவ் விடயம் அரசியலமைப்பில் கூறப்படுமாயின் அதற்கான உத்தரவாதம் அதன் மூலமாக கிடைக்கப்பெறும்.

மேலும் வெறுமனே ஒற்றை அல்லது சமஸ்டி எனக் குறிப்பிடுவது போதாது. அது ஒற்றை அல்லது சமஸ்டி எனக் குறிப்பிட்டால் அதன் பண்புகள் அவ் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் காணப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு உதாரணமாக ஓர் பழச்சாறு போத்தலில் மாம்பழச்சாறு என ஓர் உறை (Label) ஒட்டப்பட்டால் அதன் உள்ளடக்கம் முற்றும் முழுவதுமாக மாம்பழச்சாறு உள்ளடக்கி இரு‌க்க வே‌ண்டு‌ம். மாறாக அவ் உறை (Label) மாம்பழச்சாறு எனக் குறிப்பிடப்பட்டு ஆனால் அதன் உள்ளடக்கம் திராட்சை பழச்சாறாக இருந்தால் வெறுமனே அவ் உறையின் தலையங்கத்தினால் அது ஓர் உண்மையான மாம்பழச்சாறாக அமைந்து காணப்படமாட்டாது.

இதை ஒத்த வகையில் சமஸ்டி அரசு என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டால் அதன் பண்புகளும், ஏற்பாடுகளும், குண நலன்களும் சமஸ்டியை உள்ளடக்கி இருத்தல் வேண்டும். மாறாக சமஸ்டி எனக் குறிப்பிடப்பட்டு ஆனால் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் ஒற்றையாட்சிக்குரிய பண்புகளினால் மேவி இருந்தால் அது அதிகாரப் பகிர்வாகவோ, சமஸ்டி முறையாகவோ கருத்தைப்படமாட்டாது.

இதனடிப்படையில் பார்ப்போமாயின் பு‌திய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒற்றையாட்சி முறையே நாட்டின் அரசு முறைமை எனக் குறிப்பிட்டுக் கொண்டு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவது மேற்கூறப்பட்ட உதாரணத்துக்கு ஒப்பானது என ஒரு சாரார் கருதுகின்றனர்.

எனினும், மறுபுறத்தில் ஒற்றையாட்சி அரசு என்றோ அல்லது  சமஸ்டியாட்சி அரசு என்றோ அரசியலமைப்பில் பெயர் குறிப்பிடப்படுவது பெயரின் அடிப்படையில் முக்கியத்துவம் அன்று எனவும், அதன் பண்புகள் அல்லது சமஸ்டிக்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு அது எப் பெயர் கொண்டு குறித்துரைக்கப்பட்டாலும் பாதிப்பில்லை எனவும், ஒற்றையாட்சி அரசு முறைமை எனக் குறிப்பிட்டுக்கொண்டு அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்தப்படும் எனக் கூறுவது நடைமுறைச் சாத்தியமான விடயம் என மறுசாரார் கரு‌த்து‌கின்றனர்.

மேலு‌ம் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமானது காணிப் பிரச்சினை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் ஆணைக்குழு ஒருவருடத்துக்குள் அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும் எனவும், குற்றம் சுமத்தப்படாமல் விசாரணைகளன்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அலுவலகத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என்றும் அரச நிறுவனங்களின் தமது தாய்மொழியில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படும் எனவும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்று நடாத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் “கோட்டபாயவின் நாட்டை கட்டியெழுப்பும் சூபீட்ச நோக்கு” எனும் தலைப்பில் அமைந்த  தேர்தல் விஞ்ஞாபனமானது முக்கிய பத்து விடயங்களில் அடிப்படையாக கொண்டு அக் கட்சி மற்றும் ஜனாதிபதி வேட்பாளரின் கொள்கையினை பிரகடனப்படுத்துகின்றது.

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை, கலப்பு மற்றும் அணிசேரா வெளிநாட்டு கொள்கை, தூய்மையான அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்பு கூறும் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம், மக்கள் கேந்திரமாக கொண்ட பொருளாதாரம், சிறையிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை விடுவித்தல், ஒற்றையாட்சி அரச முறைமை, பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளித்தல் மற்றும் ஏனைய விடயங்கள் அத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இங்கும் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் முன்னர் கூறியதை போன்று பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தும் விடயமாக அமைந்திருப்பினும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்த விடயமாக கருதப்படவில்லை. ஏனெனில், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஐந்து கட்சிகளால் முன்வைக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகளை வெளிப்படையாகவே நிராகரித்து, நாட்டுக்கு தேசிய பாதுகாப்பே முக்கியத்துவம் என வலியுறுத்தினார்.

இத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதான இடம் பிடித்திருப்பது பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளித்தலாகும். 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை 9இன் படி இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10ஆம், 14(1),(2)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.

மேற்படி விடயத்தினையே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் திட்டவட்டமாக பற்றியுள்ளார். இவ் விடயமானது சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கும், அபிலாஷைக்கும் எதிராகவும் முரணாகவும் அமைந்து காணப்படுகின்றது. சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பானது சமதர்ம அரசு (Secular state) அல்லது மதச்சார்பற்ற அரசாக காணப்பட வேண்டும் என்பதாகும்.

மதச்சார்பற்ற அரசென்பது ஒரு நாடு எந்தவித மதத்தினாலும் அடையாளப்படுத்தப்படக்கூடாது என்பதாகும். இம் மதச்சார்பற்ற அரசு தொடர்பான எண்ணக்கருவை இரு வகைப்படுத்தலாம். ஒன்று மேற்கத்திய மதச்சார்பற்ற அரசின் தன்மை(Western Secularism), இரண்டாவது இந்திய மதச்சார்பற்ற அரசின் தன்மை(Indian Secularism).

மேற்கத்திய மதச்சார்பற்ற அரசுக் கோட்பாடானது கூறுவது என்னவெனில் அரசும் மதமு‌ம் வேறுபட்டவை மதத்தின் விடயங்களில் அரசு தலையிடாது என்பதாகும். இந்திய மதச்சார்பற்ற அரசுக் கோட்பாடானது அரசும் மதமும் வேறுபட்டவை என்றும், அரசானது எல்லா மதங்களின் மேம்படுத்தலுக்காக எல்லா மதத்தையும் சமமாகக் கருதும் என்பதாகும்.

இலங்கையானது பல்லின சமூக மக்கள் வாழும் ஓர் நாடாகும். இவ்வாறானதாக  ஒரு மதத்துக்கு முன்னுரிமையினை அரசு வழங்கினால் அங்கு மற்ற மதங்கள் ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகி மதச் சுதந்திரம் தொடர்பான விடயங்கள் இல்லாமலாக்கப்படும். எனவே இவ்வாறான ஒரு நிலை மிகவும் பயங்கரமான ஓர் நிலையாகும் என்பதுடன் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை துவம்சம் செய்கின்ற ஏற்பாடாகவும் காணப்படும்.

இதைத் தவிர்த்து, இத் தேர்தல் விஞ்ஞாபனமானத்தில் முன்னாள் போராளிகளுக்கு புனர் வாழ்வு, அரசியல் கைதி தொடர்பான விடுவிப்பு, காணிப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றியும் கோடிட்டுக்காட்டுகின்றது.

மேலும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் “தேசத்தின் எதிர்பார்ப்பு” எனும் தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனமானது அதிகளவாக நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் ஓர் அறிக்கையாக காணப்படுகின்றது. மாறாக தேசிய இனப்பிரச்சினையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதனை அவதானிக்க முடியவில்லை.. இருப்பினும் 13 அம்ச கோரிக்கைகளில் எல்லா விடயங்களிலும் தாம் மற்றும் தனது கட்சி உடன்படவில்லை என்றும் (குறிப்பாக வடக்கு – கிழக்கு இணைப்பு உடன்பாடில்லை), மேலும் அவ் 13 அம்ச கோரிக்கைகளுள் ஓர் சில விடயங்களில் நியாயத்தன்மை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுத்து நோக்கும் போது இம்முறை இடம்பெற இருக்கின்ற இவ் 8வது ஜனாதிபதி தேர்தலானது தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியமான தேர்தலாகவும் பலத்த எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ள தேர்தலாகவும் நாட்டின் உயர் அதிகாரமிக்க பதவிக்கான தேர்தலாகவும் அமைகின்றது. எனவே வாக்களிக்க தகுதியுடைய ஒவ்வொரு வாக்காளரும் (பொது மக்கள்) இவ் வேட்பாளர்களின் கொள்கை தொடர்பான சாதக பாதக தன்மையினை கருத்தில் கொண்டு தங்களது சுயவிருப்பின் நிமித்தம் தமக்கு பிடித்தமானதும் மக்களது எதிர்பார்ப்புக்களை, கோரிக்கைகளை நிறைவேற்றக்கூட கூடியவராக இருக்கின்றவருக்கும் தங்களது ஜனநாயக கடமையினை சட்டத்துக்குட்பட்டு பிரயோகிப்பதற்கான சரியான சந்தர்ப்பமாக இவ் ஜனாதிபதி தேர்தல் அமைகின்றது என்பது தின்னமாகும்.

 

Blog at WordPress.com.

Up ↑